1. இஸ்ராயேல் மக்களிடையே போலித் தீர்க்கதரிசிகள் தோன்றினார்கள். அதுபோலவே உங்களிடையேயும் பொய்ப் போதகர்கள் தோன்றுவார்கள். அழிவை விளைவிக்கும் தவறான கொள்கைகளைப் புகுத்தி, தங்களை மீட்ட ஆண்டவரையும் மறுத்து, அழிவைத் தம்மீதே விரைவாக வருவித்துக்கொள்வார்கள்.
2. அவர்களுடைய காமவெறியைப் பலர் பின்பற்றுவர். அவர்களால் உண்மை நெறி பலருடைய பழிப்புக்குள்ளாகும்.
3. பேராசையால் ஏவப்பட்டு, பசப்பு மொழி பேசி, உங்களிடம் பணம் சுரண்டுவர். பழங்காலத்திலிருந்து அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பிட்டவர் இன்று அயரவில்லை; அவர்களை அழிவுக்குள்ளாக்குபவர் உறங்கவில்லை.
4. பாவம் புரிந்த வானதூதர்களைக் கடவுள் தண்டிக்காமல் விடவில்லை; இருள் நரகின் படுகுழிகளில் தள்ளி, அவர்களை அங்கே தீர்ப்புக்காக அடைத்து வைத்திருக்கிறார்.
5. பண்டைய உலகையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை. நீதியைப் போதித்த நோவாவை வேறு ஏழு பேருடன் காப்பாற்றி, இறைப்பற்றில்லாத மக்கள் நிறைந்த உலகின் மீது வெள்ளப் பெருக்கை வருவித்தார்.
6. சோதோம் கொமோரா நகரங்களையும் தண்டித்தார். இறைப்பற்றில்லாதவர் கதி என்ன வாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்நகரங்களைச் சாம்பலாக்கிவிட்டார்.
7. காமவெறியில் உழன்ற தீயவர்களின் நடத்தையைக் கண்டு மனவேதனை கொண்ட நீதிமானாகிய லோத்தை விடுவித்தார்.
8. இந்நீதிமான் அவர்களிடையே வாழ்ந்தபோது அவர் கண்ட நிகழ்ச்சிகளும் கேட்ட பேச்சுகளும் தீயனவாகவே இருந்தன. இந்தத் தீய நடத்தை அவருடைய நேர்மையான மனத்தை நாள்தோளும் வாட்டி வதைத்தது.
9. இறைப் பற்றுள்ளவர்களைத் துன்பச் சோதனையிலிருந்து விடுவிக்கவும், அநீதர்களைத் தண்டனைக்குட்பட்டவர்களாய்த் தீர்ப்பு நாளுக்கென்று வைத்திருக்கவும் ஆண்டவருக்குத் தெரியும்.
10. குறிப்பாக, அசுத்த இச்சைகள் கொண்ட ஊனியல்பின்படி நடப்பவர்களையும் ஆண்டவரது மாட்சியைப் புறக்கணிப்பவர்களையும் அவர் தண்டிப்பார். இவர்கள் துணிச்சல் மிக்கவர்கள், அகந்தையுள்ளவர்கள்; வானவர்களைப் பழிக்க இவர்கள் அஞ்சுவதில்லை.
11. வானதூதர்களோ மிக்க ஆற்றலும் வலிமையும் பெற்றிருப்பினும், ஆண்டவர் முன் அவர்களைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்வதில்லை.
12. பிடிபடவும் சாகடிக்கப்படவுமே பிறந்த பகுத்தறிவற்ற விலங்குகளைப்போல் வெறும் இயல்புணர்ச்சிகளின்படி இவர்கள் வாழ்கிறார்கள்; தாங்கள் அறியாததையும் பழிக்கிறார்கள்; அவ்விலங்குகள் அழிவுறுவதுபோலவே இவர்களும் அழிவுறுவர்.
13. தாங்கள் இழைத்த தீமைக்குக் கைம்மாறாகத் தீமையே பெறுவர். பட்டப்பகலில் களியாட்டத்தில் ஈடுபடுவதையே இவர்கள் இன்பம் எனக் கருதுகின்றனர். சிற்றின்பத்தில் மூழ்கிக்கிடக்கும் இவர்கள், உங்கள் அன்பு விருந்தில் கலந்து கொள்வது உங்களையே மாசுபடுத்தும் மானக்கேடுதான்.
14. இவர்கள் கண்கள் ஒழுக்கம் கெட்ட பெண்களையே நாடுகின்றன; பாவத்தைவிட்டு ஓய்வதேயில்லை; இவர்கள் மனவுறுதியற்றவர்களைச் சூழ்ச்சியால் வசப்படுத்துகின்றனர்; பொருளாசையைப் பொறுத்த மட்டில் கைதேர்ந்தவர்கள்; இவர்கள் சாபத்துக்குள்ளானவர்கள்.
15. நேர்மையான வழியினின்று விலகித் தவறிப்போய், பொசொரின் மகனான பாலாம் சென்ற வழியை இவர்கள் பின்பற்றினர். இந்தப் பாலாம் தீமை செய்து ஆதாயம் பெற ஆசைப்பட்டான்.
16. ஆனால் தான் செய்த குற்றத்திற்காகக் கண்டிக்கப்பட்டான். பேச்சில்லாத கழுதை மனிதப் பேச்சுப் பேசி அந்தத் தீர்க்கதரிசியின் மதியீனத்தைத் தடுத்தது.
17. இவர்கள் நீரற்ற சுனைகள்; சுழற் காற்றால் அடித்துச் செல்லப்படும் மூடுபனி போன்றவர்கள். இருளுலகம் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
18. தவறான வழி நடப்போரிடமிருந்து இப்போதுதான் தப்பியவர்களை, இவர்கள் பகட்டான வீண் பேச்சுப் பேசி, ஊனியல்பின் இச்சைகளாலும் காமவெறியாலும் சூழ்ச்சியாய் வசப்படுத்துகின்றனர்.
19. விடுதலை அளிப்பதாக இவர்கள் வாக்களிக்கின்றனர்; ஆனால் தாங்களே அழிவுக்கு அடிமைகளாய் இருக்கின்றனர். ஒருவன் எதனால் வெல்லப்படுகிறானோ அதற்கே அவன் அடிமையாகிறான்.
20. ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவை அறியச் செய்யும் அறிவினால் உலகத் தீட்டிலிருந்து தப்பிய பின் இவர்கள் மீண்டும் அதிலே சிக்கி, அதனால் வெல்லப்பட்டால், இவர்களது பின்னைய நிலை முன்னைய நிலையினும் மோசமானதாகும்.
21. நீதி நெறியை அறிந்தபின், தங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுத்த கட்டளையை விட்டு விலகுவதைவிட, அதை அறியாதிருப்பதே இவர்களுக்கு நன்மையாக இருந்திருக்கும்.
22. "தான் கக்கினதைத் தின்ன நாய் திரும்பி வரும்" என்னும் பழமொழி இவர்களிடம் உண்மையாயிற்று. மேலும் "கழுவியபின், பன்றி மீண்டும் சேற்றிலே புரளும்."